மகநெகும நிறுவனத்தின் நிதியை குற்றவியல் ரீதியாக பயன்படுத்த உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு முன்னாள் அதிகாரிகளை அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது.
பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் (FCID) கைது செய்யப்பட்ட மகநெகுமவின் முன்னாள் பிரதி பொறுப்பதிகாரி அபேசிங்க மற்றும் முன்னாள் மேலதிக பொறுப்பதிகாரி (நிதி) அனகி புரகே மய்கல் ஆகிய இரு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
2012 மற்றும் 2015இற்கு இடைப்பட்ட காலத்தில் நிதியை போலித் திட்டங்களுக்காக அங்கீகரித்ததன் ஊடாக அரசாங்க நிதியை குற்றவியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்துவதற்கு உதவியதாகவும், அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்குமாறு அவர்களின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தனர்.
எனினும், சம்பவம் தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்று பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அதன்படி, விசாரணை நடவடிக்கைகளை விரைவாக நிறைவு செய்யுமாறு பொலிஸாருக்கு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
Tags
Sri Lanka