பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது கட்டாயமாக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளின் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தை அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு கூறினார்.
இந்த மாதம் 30ஆம் திகதி முதல் வாகனங்களின் இயக்கத்தில் 85 பாதுகாப்பு முன்மொழிவு முறைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
"தனியார் பேருந்துகளை இயக்கும் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை ஏதாவது ஒரு சமூக பாதுகாப்பு முறைமைக்குள் கொண்டுவர வேண்டும். அந்த முறைமை மூலம் 55 வயதை அடையும் போது ஓய்வூதியம் பெறக்கூடிய ஒரு முறைமைக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் ஒரு வருடத்திற்குள் நாம் அந்த இலக்கை அடைய முடியும். அதேபோல், பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்குவதை கட்டாயமாக்குகிறோம். இதன்மூலம் பேருந்து உரிமையாளர்களுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கும். தற்போது பேருந்துகள் பந்தயத்திற்கு செல்வதே மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இதற்கு காரணம், சிறிய அளவிலான பேருந்து உரிமையாளர்கள் ஒரு பேருந்தோ அல்லது இரண்டு பேருந்துகளோ மட்டுமே வைத்திருப்பதுதான். நாம் ஏற்கனவே கண்டி மற்றும் 138 வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகளை ஒரு குழுவாக இணைத்து செயற்பட ஆரம்பித்துள்ளோம். இதனை ஒரு நிறுவனம் என்று சொல்ல முடியாது, ஆனால் 138 வழித்தடத்தில் இயங்கும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தையும் ஒன்றிணைத்து, நாள் முடிவில் வருமானத்தை பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு முறைமையை உருவாக்குகிறோம். உண்மையில் இதுதான் இறுதி தீர்வு. ஏனெனில், நாளின் வருமானம் தனக்கு கிடைக்காவிட்டால் ஒழுக்கத்தை உருவாக்க முடியாது. மாலையில் வீடு திரும்பும் போது 500 ரூபாய் மட்டும் வழங்கினால், ஒழுக்கம் உருவாகாது."
Tags
Sri Lanka