இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் தனது காதலியைக் கொலை செய்து உடலை சூட்கேஸில் அடைத்து ஆற்றில் வீசிய இளைஞர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர்.
வாட்ஸ்அப்பில் வைத்த ஒரு செல்ஃபி ஸ்டேட்டஸ் மூலம் குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர்.
கான்பூரில் 22 வயதான சூரஜ் குமார் உத்தம், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் 20 வயதுடைய உணவக ஊழியரான அகன்க்ஷாவை சந்தித்தார்.
சுமார் 10 மாதங்களுக்கு முன்பு, இருவரும் சேர்ந்து ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், ஜூலை 21 ஆம் திகதி சூரஜிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அகன்க்ஷா கண்டுபிடித்தார்.
இது குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த சூரஜ், அகன்க்ஷாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
கொலையை மறைப்பதற்காக, சூரஜ் தனது நண்பரான ஆஷிஷ் குமார் என்பவரின் உதவியை நாடினார்.
இருவரும் சேர்ந்து அகன்க்ஷாவின் உடலை ஒரு கருப்பு சூட்கேஸில் வைத்து, மோட்டார் சைக்கிளில் சுமார் 95 கி.மீ. தொலைவில் உள்ள சிலாக்காட்டில் உள்ள யமுனை நதியில் வீசியுள்ளனர்.
இந்த கொடூரமான செயலை செய்த பிறகு,சூட்கேஸுடன் சூரஜ் ஒரு செல்ஃபி எடுத்து, அதை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார்.
அகன்க்ஷாவை ஜூலை 22 முதல் காணவில்லை என அவரது குடும்பத்தினர் பொலிஸில் புகார் அளித்தனர்.
இதற்கிடையில், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சூரஜ் மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் ஆகியோர் குற்றவாளிகள் என தெரியவந்தது.
இதையடுத்து, கடந்த சனிக்கிழமை அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது, ஆற்றில் வீசப்பட்ட அகன்க்ஷாவின் உடலைத் தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
Tags
India