இஸ்ரேலில் விசா இல்லாமல் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசா பெறுவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே பாராளுமன்ற மட்டத்தில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நிறுவப்பட்ட பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இலங்கையர்களுடன் பிற நாட்டினரும் விசா இல்லாமல் இருப்பதால், இந்த விடயத்தை இஸ்ரேல் பாராளுமன்றத்தின் வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பான குழுவிடம் முன்வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அதன்படி, அடுத்த கலந்துரையாடலில் இஸ்ரேல் பாராளுமன்றத்தின் வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பான குழுவிடம் இந்த விடயத்தை முன்வைக்க எதிர்பார்ப்பதாக நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் இஸ்ரேலில் பெறக்கூடிய பயிற்சி குறித்தும் இந்த கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் இஸ்ரேல் - இலங்கை நட்புறவு சங்கத்தின் தலைவர் Dr.Tsega Melaku, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகள், பாராளுமன்றத்தின் வெளியுறவுக் கொள்கைப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பிரதி பிரதானி ஹேமந்த ஏகநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.