இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (22) அவரது பிணைக் கோரிக்கையை நிராகரித்து இந்த உத்தரவை பிறப்பித்தார்.
2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திதகி நடந்த போராட்டத்தின் போது, சஷீந்திர ராஜபக்ஷவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான, கிரிஇப்பன்வெவ, செவனகலவில் உள்ள காணியொன்றில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் உள்ளிட்ட சொத்துக்கள் சேதமடைந்தன.
அந்த சொத்துக்கான இழப்பீடு நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீறி இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் சில அதிகாரிகளுக்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுத்து இழப்பீட்டை செலுத்துமாறு பலவந்தப்படுத்தியுள்ளதாக அவர் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன்போது 8,850,000 ரூபாயை (88 லட்சம்) இழப்பீடாக பெற்றதன் ஊடாக ஊழல் என்ற குற்றத்தை செய்தமை மற்றும் மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை ஊடாக பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளதாக சந்தேகத்தின் பேரில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
Tags
Sri Lanka