மண்சரிவு என்பது ஒரு இயற்கையான நிகழ்வு என்றும், உலகம் முழுவதும் மழைவீழ்ச்சி, நிலநடுக்கம், பனிப்பாறைகளின் செயற்பாடுகள் காரணமாக மண்சரிவுகள் ஏற்படுவதாகவும், இலங்கையில் மழைவீழ்ச்சி காரணமாகவே மண்சரிவுகள் ஏற்படுவதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.
மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் மூன்று விதமாக விடுக்கப்படுகின்றன. அவை முதலாம் கட்டம், இரண்டாம் கட்டம் மற்றும் வெளியேறுவதற்கான சிவப்பு அறிவிப்பு என மூன்று பிரிவுகளாக வழங்கப்படுவதாக கலாநிதி வசந்த சேனாதீர குறிப்பிட்டார்.
அந்தப் பிரதேசத்தில் கிடைக்கும் மழைவீழ்ச்சியைக் கணக்கிடுவதன் மூலம் கிடைக்கும் எண்ணிக்கைப் பெறுமானத்துடன், உரிய அறிவிப்புகள் அந்தந்த கட்டங்களின் கீழ் வகைப்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்ட இடங்கள் மாத்திரமே மண்சரிவுக்கு உள்ளாகும் என இதன் மூலம் அர்த்தப்படாது என்றும், முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் உள்ள பிரதேசங்களும் மண்சரிவுக்கு உள்ளாகக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்ட பின்னர் எந்தவொரு கட்டத்தின் கீழும் மண்சரிவுச் சம்பவம் ஏற்படக்கூடும் என்றும், சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பாரிய அளவில் மண்சரிவுகள் ஏற்படக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாரிய மண்சரிவுக்கு மழைவீழ்ச்சி காரணமாக அமையலாம் என்றாலும், ஒன்று மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் உள்ள பிரதேசங்களில், மனிதனால் உருவாக்கப்பட்ட மண் மேடுகள் சரிந்து விழுதல் போன்றன ஏற்படக்கூடும் என கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.
அத்துடன், விடுக்கப்படும் அறிவிப்பில் மண் மேடுகள் சரிந்து விழுதல், கற்பாறைகள் புரளுதல் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள இடங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் அங்கு கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர,
"இதற்கு மேலதிகமாக அடையாளம் காணப்பட்ட சில மண்சரிவுப் பிரதேசங்கள் உள்ளன. உதாரணமாக கலபட, அத்துடன் பியனில்ல, வீரியபுர, உடபத அதாவது புளத்கொஹுபிட்டிய பகுதியில். இவற்றுக்கு மேலதிகமாக இன்னும் உள்ளன. அங்கும் மண்சரிவுகள் ஏற்படுகின்றன. அதாவது வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவு சரிகின்றது. அதனால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்," என்றார்.
Tags
Sri Lanka
