நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற நான்கு வாகன விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துக்கள் நேற்று (22) நடந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி, நேற்று மதியம் இலுப்பகடவை பொலிஸ் பிரிவில் யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் கள்ளியடி பகுதியில் மன்னார் திசையில் இருந்து யாழ்ப்பாணம் திசை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது, செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் பின்னால் அமர்ந்து பயணித்தவரும் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம், இளவாலை பகுதியை சேர்ந்த 45 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தார்.
அதேநேரம் முல்லேரியா பொலிஸ் பிரிவில் கடுவலை - அங்கொடை வீதியில் அங்கொடை சந்தியில், கடுவலை திசையிலிருந்து அங்கொடை திசை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இறந்தவர் கொதடுவ பகுதியைச் சேர்ந்த 37 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நேற்று மாலை திருகோணமலை - தம்புள்ளை வீதியில் ஹபரணையிலிருந்து தம்புள்ளை திசை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி ஒன்று வீதியை கடந்த பாதசாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி உயிரிழந்ததுடன், அவர் தம்புள்ளையைச் சேர்ந்த 56 வயதானவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, கொடிகாமம் பொலிஸ் பிரிவில் கச்சாய் கொடிகாமம் வீதியில் கச்சாய் வடக்கு முதல் குறுக்குத் தெரு அருகே கச்சாய் கொடிகாமம் திசை நோக்கிச் சென்ற உழவு இயந்திரம் அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மற்றும் பின்னால் பயணித்த பெண்ணும் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பெண் உயிரிழந்தார்.
இறந்தவர் மிருசுவிலைச் சேர்ந்த 46 வயதானவர் என தெரியவந்துள்ளது.
Tags
Sri Lanka