குஷ் போதைப்பொருள் தொகையொன்றை நாட்டுக்குக் கொண்டு வந்த நபரொருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் தாய்லாந்தின் பேங்கொக் நகரில் குறித்த போதைப்பொருளைக் கொள்வனவு செய்து, வேறொரு நபர் மூலம் அதனை நாட்டுக்கு அனுப்பி தனது வீட்டில் மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் என்பதுடன், இந்த சந்தேக நபர் நாட்டின் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேக நபர் பல்வேறு நபர்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருளை நாட்டுக்கு வரவழைத்துள்ளதாகவும், பின்னர் நாடு முழுவதும் அந்த போதைப்பொருள் விநியோகத்தை வழிநடத்தியுள்ளதாகவும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் கண்டறிந்துள்ளது.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் இருபத்தி ஒரு கோடியே அறுபத்தி ஆறு இலட்சத்து எண்பதாயிரம் (216,680,000) ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 13 ஆம் திகதி இந்த போதைப்பொருள் அடங்கிய பயணப் பொதியை வேறொரு நபர் ஊடாக நாட்டுக்கு அனுப்பி, பின்னர் அதனை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற்றி கடத்தல்காரரின் வீட்டுக்குக் கொண்டு சென்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பின்னர் குறித்த கடத்தல்காரர் நேற்று (14) கைப்பை ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து நாட்டுக்கு வந்துள்ளார்.
இவை அனைத்தையும் கண்காணித்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர், குறித்த வர்த்தகர் வீட்டுக்கு வந்த பின்னர் அந்த வீட்டைச் சுற்றிவளைத்து, அந்த வீட்டில் திறக்கப்படாமல் இருந்த பயணப் பொதிகளுக்குள் 20 பொதிகளாக தயார் செய்யப்பட்டிருந்த குஷ் போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளதுடன், அதனுள் இருந்து 21 கிலோ 668 கிராம் போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.
இதுதவிர கடத்தல்காரரிடமிருந்து பதினைந்து இலட்சத்து பத்தொன்பதாயிரம் ரூபா பெறுமதியான 4,900 அமெரிக்க டொலர்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட கடத்தல்காரர் மற்றும் அவர் வசமிருந்த போதைப்பொருள் மற்றும் பணம் என்பன இன்று வெலிசற நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளன.
