கடந்த 24 மணிநேரத்தில் அவிசாவளைக்கு அதிக மழை வீழ்ச்சி

 

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) முற்பகல் 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது. 

குறித்த காலப்பகுதியில் அங்கு 180 மி.மீ அளவில் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார். 

அதேநேரம் ஹங்வெல்ல பகுதியில் 158 மில்லிமீற்றர் அளவிலும், தெரணியகலை பகுதியில் 122 மி.மீ. அளவிலும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

இதேவேளை நேற்று இரவு முதல் களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்த போதிலும், அது இதுவரை எச்சரிக்கை மட்டத்தை அடையவில்லை என அவர் கூறினார். 

அதேபோல், அத்தனகலு ஓயாவின் தூனமலே அளவீட்டு நிலையப் பகுதியிலும் அதனைச் சூழவுள்ள இடங்களிலும் 176 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

நேற்று கிரியுல்ல பகுதியில் பதிவான 172 மி.மீ. மழைவீழ்ச்சி காரணமாக மா ஓயாவின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. 

இதன்படி கிரியுல்ல மற்றும் பாதல்ஹம பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ள போதிலும், அது இதுவரை வெள்ளப் பெருக்கு நிலையை அடையவில்லை என கூறினார். 

மேலும், கிங் கங்கை, நில்வலா கங்கை மற்றும் களுகங்கை ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் 50 மி.மீ. முதல் 100 மி.மீ. வரையிலான மழைவீழ்ச்சி கிடைத்துள்ளதாக சூரியபண்டார தெரிவித்தார். 

ஒட்டுமொத்தமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதால், பல ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் நீர்மட்டங்கள் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்றும் ஈரவலயப் பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், ஆறுகளை அண்டிய மற்றும் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென எல்.எஸ். சூரியபண்டார அறிவுறுத்தினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form