ஒப்பந்தம் சாத்தியம்; ஆனால் ஹோர்முஸ் நீரிணை உடனே திறக்கப்படாது என ஈரான் அறிவிப்பு!


 ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக ஓமானுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் நிலையை நெருங்கியுள்ள போதிலும், அந்த நீர்வழியை மீண்டும் திறப்பதற்கு அதுமட்டுமே போதுமானதாக இருக்காது என்று ஈரான் தெரிவித்துள்ளது. 


அதேவேளையில், அங்கு ஈரான் மற்றொரு கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தெரிவித்துள்ளது. 

நீரிணையின் இருபுறமும் அமைந்துள்ள ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே விரைவில் ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் என்றும், இதன் மூலம் வழமையான எண்ணெய் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்றும் அமெரிக்க அதிகாரி ஒருவர் அண்மையில் தெரிவித்தார். 

பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுடன் தொடங்கிய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பரந்த அளவிலான ஒப்பந்தத்திற்கு, இந்த மூலோபாய நீர்வழியின் கட்டுப்பாடு குறித்து இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 

ஹோர்முஸ் நீரிணை வழியிலான புதிய கப்பல் போக்குவரத்து பாதை குறித்த ஒப்பந்தத்தை ஈரானும் ஓமானும் "மிகவும் நெருங்கியுள்ளன" என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராஃச்சி தெரிவித்துள்ளார். 

இருப்பினும், நீரிணையை மீண்டும் திறப்பது அமெரிக்கா ஈரானுக்கு வழங்கும் நஷ்டஈடு உள்ளிட்ட பிற நிபந்தனைகளிலேயே தங்கியுள்ளது என்றும் அவர் கூறினார். 

நீரிணை வழியிலான முந்தைய கப்பல் போக்குவரத்துப் பிரிவு திட்டம் இனி தெஹ்ரானுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனக் குறிப்பிட்ட அவர், நிரந்தரப் பாதை குறித்த தொழில்நுட்ப மற்றும் சட்டப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை ஓமானுடன் ஒரு தற்காலிகப் பாதை குறித்து ஈரான் விவாதித்து வருவதாகவும் தெரிவித்தார். 

போருக்கு முன்னர் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் ஐந்திலொரு பங்கைக் கொண்டு சென்ற குறுகிய நீரிணையில் செல்லும் கப்பல்கள் மீதும், வளைகுடா நாடுகள் மற்றும் ஜோர்தானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீதும் தாக்குதல்களை நடத்தி ஈரான் அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலளித்து வருகிறது. 

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்ற தனது அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரு சரக்குக் கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form