கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, பௌத்த பிக்குகள் சிலர் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 16ஆம் திகதி பிற்பகல் விஹாரமஹாதேவி பூங்காவுக்கு வந்த பிக்குகள் இந்தச் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்தனர்.
அன்றைய தினம் அங்கு தற்காலிகக் கூடாரம் ஒன்றை அமைக்க முயன்றபோது, பொலிசாருக்கும் பிக்குகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டது.
ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை இந்த இடத்தை விட்டு நகரப் போவதில்லை என அங்குள்ள பிக்குகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய பிக்குகள், பின்னர் புத்த சாசன அமைச்சுக்கு முன்பாகக் கூடி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
எனினும், அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை விஹாரமஹாதேவி பூங்காவில் தங்கியிருப்பதாக அவர்கள் அறிவித்தனர்.
இதனிடையே, நேற்றிரவு (17) விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியது.
இதன்போது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக, பலாங்கொட கஸ்ஸப தேரர் சுவசெரிய அவசர கால அம்பியூலன்ஸ் வண்டி மூலம் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பொலிஸார் தாக்கியதனால் தேரருக்குக் காயம் ஏற்பட்டதாகப் பிக்குகள் தரப்பினர் குற்றம் சுமத்தினர்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மறுத்துள்ளார்.
குறிப்பிட்ட தேரர் அந்த இடத்தில் கால் தவறி கீழே விழுந்ததாகவும், அதன் பின்னரே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர், மேலதிக சிகிச்சைகள் எதுவும் தேவையில்லை எனக் கூறி அங்கிருந்து ஒரு மணி நேரத்திற்குள் சுய விருப்பின் பேரில் வெளியேறிச் சென்றதாகக் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் இந்திக குமார தெரிவித்தார்.
