மான் இறைச்சி மற்றும் துப்பாக்கியுடன் இருவர் கைது


 மான் இறைச்சி, வேட்டையாடுவதற்குப் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இரு சந்தேக நபர்களைச் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

 

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் மான் இறைச்சி என்பன மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

 

சம்மாந்துறைப் பகுதியிலுள்ள புதிய வளத்தாப்பிட்டி, 12 வீட்டுத்திட்டக் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (12) மாலை முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையின் போதே குறித்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. 

 

கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் அவர்களின் ஆலோசனைக்கமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிஷாந்த பிரதீப் குமாரவின் நெறிப்படுத்தலில், ஊழல் ஒழிப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான குழுவினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

 

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும், கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களையும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form